×

ஊட்டியில் களைகட்டும் கோடை சீசன் சுற்றுலா தலங்களில் அலைமோதும் கூட்டம்

 

ஊட்டி, ஏப். 29: ஊட்டியில் கோடை சீசன் களைகட்ட துவங்கியுள்ள நிலையில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நடப்பு ஆண்டு பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சமவெளி பகுதிகளில் வெயில் கொளுத்துவதால் விடுமுறை கொண்டாடவும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காகவும் குளு குளு ஊட்டியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர்.

குறிப்பாக மூன்று மாநில எல்லையில் நீலகிரி அமைந்துள்ளதால் கேரளா, கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். இந்நிலையில் கர்நாடகா மற்றும் கேரளாவில் கடந்த 26ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் அன்றைய தினம் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தொடர்ந்து வார விடுமுறை நாட்களையொட்டி கடந்த இரு நாட்களாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகளவு குவிந்தனர்.

நேற்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா மலைச்சிகரம் போன்ற சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். அதற்கேற்ப ஊட்டியில் வெயிலான காலநிலை நிலவிய நிலையில் அதனை அனுபவித்த படியே சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்துள்ள நிலையில் லாட்ஜ்கள், ஓட்டல்கள், காட்டேஜ்களில் பெரும்பாலான அறைகள் நிரம்பின.

கடந்த இருநாட்களில் மட்டும் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவை சுற்றி பார்த்து சென்றனர். ஊட்டி நகரில் உள்ள சுற்றுலா ரங்களை பார்த்து மகிழ்வது மட்டுமின்றி நகருக்கு வெளியில் அமைந்துள்ள தேயிலை பூங்கா, சூட்டிங்மட்டம், ஊசிமலை, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோடநாடு காட்சி முனை போன்ற இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக தாவரவியல் பூங்கா சாலை, படகு இல்ல சாலைகள், கூடலூர் சாலை, குன்னூர் சாலை என முக்கிய சாலைகளில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டது. இவற்றை காவல்துறையினர் உடனுக்குடன் சரி செய்தனர். போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலா தலங்களுக்கு சுற்று பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் பயணித்து சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

The post ஊட்டியில் களைகட்டும் கோடை சீசன் சுற்றுலா தலங்களில் அலைமோதும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...